காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த திருமுறை திருவிழா எனப்படும் ஆன்மிக பெருவிழாவின் நிறைவு நாளில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
‘திருமுறை திருவிழா’ எனப்படும் மூன்று நாட்கள் ஆன்மிக பெருவிழா, காஞ்சிபுரத்தில் கடந்த 19ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று நிறைவு விழா நடந்தது. புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்க நிறுவன தலைவர் டாக்டர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை வகித்தனர். அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்க தலைவர், வி.ஐ.டி.. பல்கலை துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார்.இதில், நேற்று காலை 5:00 மணிக்கு, சிவனடியார்கள், சிவபக்தர்கள் என 508 பேர் பங்கேற்று சிவபூஜை செய்தனர். சிவபூஜை செய்தவர்களுக்கு திருமுறை திருவிழா தலைமை நிர்வாகி காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் தலைவர் பிரபு, சத்யா பிரபு ஆகியோர் வேட்டி, சேலை வழங்கினர். காலை 6:45 மணிக்கு தவில், நாதஸ்வர வித்வான்களின் இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து ஓதுவார்கள் திருமுறை பேழை வழிபாடும் நடத்தினர். காலை 8:45 மணிக்கு, தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையில், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்.
துழாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், கந்தபரம்பரை நாச்சியார் கோவில் ஆதீனம் சிவசுப்பிரமணிய தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள், மலர் அலங்காரத்தில், திருமண கோலத்தில் எழுந்தருளிய ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாண வைபவத்தை விமரிசையாக நடத்தி வைத்தனர். திருமண வைபவத்திற்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தொகுப்புரை நிகழ்த்தினார். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஆதீனங்கள் கவுரவிக்கப்பட்டனர். ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கும், திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும், விழா குழுவினர் சார்பில், ஸ்படிக லிங்கம், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டன. திருமண விருந்து, தாம்பூலமாக திருமுறைப் புத்தகம், மஞ்சள் குங்குமத்துடன், ருத்திராட்ச மாலை, தாலிக்கயிறு அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.
திருமுறை திருவிழா தலைமை நிர்வாகி பச்சையப்பாஸ் சில்க்ஸ் தலைவர் பிரபு வரவேற்றார். சம்பத் பாலசுந்தரம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் ஜோதீஸ் ரெசிடென்சி மற்றும் ரெஸ்டாரன்ஸ் முருகேஷ் நன்றி கூறினார்.
செயற்கை நுண்ணறிவு வந்தாலும் பக்திதான் முக்கியம்@@subboxhd@@ காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திரர் ஆசியுரை “கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், நம் பக்தி தான் நமக்கு முக்கியம். பக்தி இருந்தால் தான், நாம் அனைத்து தொழிலையும் செய்ய முடியும்,” என, காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். திருமுறை திருவிழாவின் நிறைவு விழாவில், காஞ்சிபுரம் சங்கரமடம் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு வழங்கிய ஆசியுரை: ஆன்மிக உணர்வு இருந்தால் தான் எந்த வேலையையும் செய்ய முடியும். கோவில்களுக்கு வாரத்திற்கு ஒருமுறையாவது நாம் செல்ல வேண்டும். தினசரி சென்றால் விசேஷம். இங்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடத்தினீர்கள்.
பனிப்பொழிவு இருந்தாலும் காலையிலேயே மக்கள் ஆர்வத்தோடு வந்தனர். மாவடி சேவை, பங்குனி உத்சவத்திற்கு வருவது போல் மக்கள் வந்ததை பார்க்க முடிந்தது. பல விதமான லிங்கங்கள் இங்கு வைத்திருந்தீர்கள். அகண்ட பாரதத்தில், 51 சக்தி பீடங்கள் இருந்தன. இந்தியாவில் இப்போது 40 சக்தி பீடங்கள் உள்ளன. பாகிஸ்தானில், வங்க தேசத்தில் சில சக்தி பீடங்கள் உள்ளன. வங்க தேசத்தில் உள்ள டாக்காவுக்கு சென்ற ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அங்குள்ள கோவிலில் சண்டி ஹோமம் நடத்தினார். அங்கு, ‘சங்கராச்சாரியார் கேட்’ என்ற நுழைவு வாயிலையும் திறந்து வைத்தார். சக்தி பெற நாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிய வேண்டும். காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், ஒரு ஆண்டுக்கு 80 நாட்கள் திருவிழா நடக்கிறது. வேறு எங்கும் இதுபோல் திருவிழாக்கள் நடப்பதில்லை. இவை மேலும் அதிகரிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை. திருப்பாவை, திருவெம்பாவை, பஜனை கோஷ்டிகள் ஆகியவற்றை நாம் ஊக்குவிக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும் நம் பக்தி தான் நமக்கு முக்கியம். பக்தி வந்தால் தான் நாம் அனைத்து தொழிலையும் செய்ய முடியும். மனிதன் – தெய்வம் இடையே, பக்தி தான் இணைப்பு பாலமாக உள்ளது. இவ்வாறு அவர் ஆசியுரை வழங்கினார்.