திருப்பரங்குன்றம் மலைக்கு 20 நாட்களுக்குப் பின்பு செல்ல அனுமதி; சந்தனக்கூடு விழாவிற்காகவே என பொதுமக்கள் குற்றச்சாட்டு



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு போலீசார் இன்று அனுமதி அளித்தனர். சந்தனக்கூடு விழாவிற்காக இஸ்லாமியர்களை மலைமேல் செல்ல அனுமதிப்பதற்காக அனைவரும் அனுமதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் டிச. 3அன்று கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தீபம் ஏற்றப்படவில்லை. இந்த பிரச்னை குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், மேல் முறையீட்டு வழக்கும் விசாரணையில் உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவிற்காக வழக்கம்போல் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதற்காக டிச. 2முதல் திருப்பரங்குன்றம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூடுதலாக ஆயிரம் போலீசார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மலைமேல் செல்லக்கூடிய பெரிய ரத வீதி, பழனி ஆண்டவர் கோயில் சந்திப்பு, மலை படிக்கட்டுகளுக்கு முன்பு பழனி ஆண்டவர் கோயில் அருகே ஆகிய இரண்டு இடங்களிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு பகுதிகளில் இருநூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்கு செல்வதற்குகூட போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். டிச. 2முதல் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. டிச. 3ல் 144 தடை உத்தரவு போடப்பட்டது.‌ 


சில தினங்களுக்கு முன்பு மலையிலுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு திருவிழாவிற்காக முன்னேற்பாடுகள் செய்ய நான்கு இஸ்லாமியர்கள் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்கா நிர்வாகிகள் சந்தனக்கூடு விழாவிற்காக மலை மேல் கொடியை கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் பலத்தை எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை மலை மேல் செல்ல அனுமதித்துள்ளீர்கள், எங்களையும் தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் 20 நாட்களுக்கு பின்பு இன்று மதியம் 1:10 மணிமுதல் அனைவரும் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர். பழனி ஆண்டவர் கோயில் தெரு பெரிய ரதவீதி சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை போலீசார் அகற்றினர். 


பழனி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு பொதுமக்கள் கூறியதாவது: 20 நாட்களாக யாரையும் மலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. மெயின் ரோட்டில் இருந்து எங்கள் வீட்டுகளுக்கு வருவதற்கு கூட போலீசார் மிகுந்த சிரமப்படுத்தினர். நேற்று இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடியேற்றப்பட்டது. ஜன. 6 அன்று சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது.‌அதுவரை இஸ்லாமியர்கள் மலை மேல் தர்காவிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது அனைவரும் மலைக்குச் செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர். சந்தனக்கூடு திருவிழா இல்லையென்றால் அனுமதித்திருக்க மாட்டார்கள். இந்த அனுமதி ஜன.‌7க்குபின்பும் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்