புதுமணத் தம்பதிகளுக்கு இலவசமாக வருகிறது திருப்பதி பெருமாளின் அட்சதை பிரசாதம்!



திருப்பதி; உங்கள் வீட்டில் திருமண அழைப்பிதழை அனுப்பிவைத்தால் போதும் திருமலை திருப்பதியில் இருந்து பெருமாளின் படத்துடன் கூடிய பிரசாதங்களும் அட்சதையும் இலவசமாக அனுப்பிவைக்கப்படுகிறது.


ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்குத் கிடைத்துவரும் இந்த தெய்வீக ஆசி பற்றிய தெரிந்துகொள்வோமா: திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மங்கல நிகழ்வு. அத்தகைய புனிதமான தருணத்தில், கலியுக வைகுண்டமான திருமலை வேங்கடவனின் ஆசியைப் பெறுவது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது. பக்தர்களின் இந்த உணர்வை மதித்து, புதுமணத் தம்பதிகளுக்குத் தன் ஆசீர்வாதத்தை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும் "ஸ்ரீவாரி ஆசீர்வாதம்" திட்டத்தைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம்  சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தங்கள் திருமணப் பத்திரிகையை தேவஸ்தானத்திற்கு அனுப்பும் தம்பதிகளுக்குக் கீழ்க்கண்ட புனிதப் பொருட்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படுகின்றன: ஸ்ரீவாரி அட்சதை: சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்த புனித அரிசி.மங்கலப் பொருட்கள்: குங்குமம் மற்றும் கங்கணம் (மங்கல நூல்). திருவுருவப் படங்கள்: திருவேங்கடமுடையான் மற்றும் அலர்மேல் மங்கைத் தாயாரின் திருவுருவப் படங்கள். வாழ்த்து மடல்: தேவஸ்தான நிர்வாக அதிகாரி பெயரில் அனுப்பப்படும் வேத ஆசீர்வாதக் கடிதம். திருமணத்தின் புனிதத்தையும், இல்லற தர்மத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கும் அரிய நூலான "கல்யாண சமஸ்கிருதி" புத்தகம் ஒன்று.


திருமணச் சடங்குகளில் கங்கணதாரணம் என்பது மிக முக்கியமானது. தீய சக்திகளிடமிருந்து தம்பதிகளைக் காக்க, மணமகனின் வலது கையிலும் மணமகளின் இடது கையிலும் காப்பு கட்டப்படும். இதற்காகவே தாயாரின் ஆசி பெற்ற கங்கணத்தை தேவஸ்தானம் வழங்குகிறது. அதேபோல், தம்பதிகள் செழிப்பாகவும், அன்யோன்யமாகவும் வாழ வேண்டி ‘தாலம்பராலு’ எனப்படும் அட்சதையை சுவாமியின் ஆசியுடன் அனுப்பி வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தம்பதிகள் இந்தச் சேவையைப் பெறுகின்றனர். இதற்காகத் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தின் அஞ்சல் பிரிவினர் ஆண்டு முழுவதும் அயராது பணியாற்றி வருகின்றனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்கள், தங்கள் திருமணப் பத்திரிகையை முழுமையான வீட்டு முகவரியுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்:


The Executive Officer, Tirumala Tirupati Devasthanams, TTD Administrative Building, K.T. Road, Tirupati – 517501.


இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, ஒரு திருமணப் பத்திரிகையை அஞ்சலில் அனுப்பினால் போதும், ஏழுமலையானின் ஆசி உங்கள் இல்லம் தேடி வரும். "இல்லறமே நல்லறம்" என்பதைப் போற்றும் வகையில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. முக்கிய குறிப்பு :நீங்கள் அனுப்பும் திருமணப் பத்திரிகை தமிழக முகவரியிலிருந்து சென்றால் அல்லது உங்கள் திருமணப் பத்திரிகை தமிழில் இருந்தால், பெரும்பாலும் அஞ்சல் பிரிவினர் அதற்குப் பொருத்தமான தமிழ் வழி வாழ்த்து மடல் மற்றும் தமிழ் மொழி புத்தகத்தையே அனுப்ப முயற்சிப்பார்கள். இன்னும் உறுதியாகத் தமிழ் மொழி புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள், திருமணப் பத்திரிகையுடன் ஒரு சிறிய தாளில் "Kindly send the Kalyana Samskruthi book and blessing letter in Tamil language" என்று ஒரு வரி எழுதி வைப்பது நல்லது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்