ராமேஸ்வரம்: தி.மு.க., ஆட்சியில் ராமேஸ்வரம் கோயிலில் நடந்த ரூ. 3.40 கோடி லட்டு மோசடி விவகாரத்தில், போலீசார் விசாரணை துவக்காமல் உள்ளதால், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2024 முதல் 2026 மார்ச் 13 வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்குவதிலும், கோயில் வளாகத்தில் உள்ள கவுண்டரில் லட்டு விற்பனையிலும் முறைகேடு நடந்ததை மார்ச் 14ல் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை ஆய்வு செய்தார். இதில் ரூ.3.40 கோடி லட்டு மோசடி செய்த கோயில் ஊழியர்கள் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட 6 பேரை, மே 14ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன்பின் சஸ்பெண்ட் செய்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த பணத்தை பெற்று கோயில் நிர்வாகத்திற்கு வழங்கும்படி மே 15ல் ராமநாதபுரம் போலீஸ் எஸ்.பி., சந்தீஸிடம் கோயில் இணை ஆணையர் மனு கொடுத்தார்.
போலீசார் முடக்கம் : ராமேஸ்வரம் கோயிலில் லட்டு மோசடி விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இது தி.மு.க., ஆட்சியில் நடந்தது என்பதால் பின்னணியில் ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், இதன் விசாரணையை உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் தீவிரபடுத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். இச்சூழலில் புகார் செய்து இன்றுடன் 5 நாட்கள் ஆகியும், இதுநாள் வரை போலீசார் விசாரிக்காமல் முடங்கி உள்ளனர். இதனால் மோசடி செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தி.மு.க., ஆட்சியில் நடந்த மோசடியை போலீசார் விசாரிக்க தயங்கும் மர்மம் என்ன?. எனவே இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் தலையிட்டு விசாரணை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.