மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலியில் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அம்பாளை அப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவம் சிறப்பாக நடைபெறும். கோவிலுக்கு வந்து அம்பாளை மனம் உருக பிரார்த்தனை செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு குருக்கள் பாபு நடை சாத்தி சென்றுள்ளார். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோவில் கதவு திறந்து கிடப்பது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் விரைந்து வந்து பார்த்த போது கோவில் சன்னதி கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது முத்து மாரியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த மூன்று பவுன் தங்கத் தாலி, மூக்குத்தி ஆகியவற்றை மறுமணவர்கள் திருடி சென்றது தெரிய வந்தது மேலும் கோவில் முன்னாள் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த ரூ. 20,000 பக்தர்கள் அளித்த காணிக்கை பணத்தை திருடி இருப்பதும் தெரிய வந்தது இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.