பனசங்கரி ஓம்காரேஸ்வரா கோவிலில் 12 ஜோதிர் லிங்கங்களை தரிசிக்கலாம்



பெங்களூரின் பனசங்கரி 6வது ஸ்டேஜ் சீனிவாசபுராவில் ஓம்கார் மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,800 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலை உச்சியில் ஓம்காரேஸ்வரா கோவில் உள்ளது. சோம்நாத், மல்லிகார்ஜுனா, மஹாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், கேதார்நாத், பீமசங்கர், காசி விஸ்வநாதர், திரியம்பகேஷ்வர், வைத்தியநாதர், நாகேஸ்வரர், ராமநாத சுவாமி, கிருஷ்ணேஷ்வர் ஆகிய 12 ஜோதிர்லிங்கங்களை, ஒரே இடத்தில் இக்கோவிலில் காணலாம்.

அனைத்து ஜோதிர் லிங்கங்களுக்கும் தனி தனியாக கர்ப்ப கிரகங்களும், அவற்றின் மேல் விமான கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 ஜோதிர் லிங்கங்களும் புனிதமான நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்டவை.

ஆன்மிக அம்சம் இங்குள்ள அரிய ஆன்மிக அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு ஜோதிர்லிங்கத்தின் அடிப்பகுதியிலும் தலா 1,008 சிறிய நர்மதேஸ்வர லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. முதன்மை கடவுளான ஓம்காரேஸ்வரா லிங்கத்தின் அடிப்பகுதியில் மட்டும் 2,008 லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 12 முதன்மை லிங்கங்களும், பக்தர்கள் கண்களுக்கு புலப்படாத வகையில் 13,000க்கும் மேற்பட்ட லிங்கங்களும் உள்ளன.

இக்கோவிலின் கட்டுமான பணிகள் 2002ம் ஆண்டு துவங்கப்பட்டன. சத்குரு ஸ்ரீசிவபுரி மஹாசுவாமிகள் துவக்கி வைத்தார். அவர் 2007ல் முக்தியடைந்த பின், அவரது சீடர் ஸ்ரீமதுசூதனாந்தபுரி சுவாமிகள் பணிகளை முன்னெடுத்து, 2011 பிப்ரவரி 16ம் தேதி கும்பாபிகேஷகத்தை பிரமாண்டாக நடத்தினார்.

கோவில் வளாகத்தில் மத்சய நாராயண சுவாமி, வனதுர்கா தேவி உள்ளிட்ட சுவாமி சிலைகளும் உள்ளன. மலை உச்சியில் எச்.எம்.டி., நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மாபெரும் கடிகார கோபுரம் உள்ளது. இது உலகிலேயே இரண்டாவது பெரிய கடிகார கோபுரம் என்று கூறப்படுகிறது. இதுதவிர 1,200 கிலோ எடையுள்ள பிரமாண்ட வெண்கல மணியையும் இங்கு காணலாம்.

மஹா சிவராத்திரி தியான மண்டபம், வேதங்கள், ஆகமங்களை சொல்லி தரும் பள்ளி, கோசாலை என மனதிற்கு நிறைவான பல விஷயங்களை பார்க்கலாம். தினமும் கா லை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். ஞாயிறு அல்லது அரசு விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்து இருக்கும். மஹா சிவராத்திரி இங்கு வெகு விமரிசை யாக கொண்டாடப்படுகிறது.

எப்படி செல்வது? 


* மெஜஸ்டிக்கில் இருந்து பனசங்கரி 6வது ஸ்டேஜ் செல்லும் பி.எம்.டி.சி., பஸ்களில் செல்லலாம். பஸ் நம்பர் 210 என், 217 டி.


* சிவாஜிநகரில் இருந்து பனசங்கரிக்கு பி.எம்.டி.சி., பஸ் நம்பர் 13ல் செல்லலாம்.
* காரில் சென்றால் நைஸ் ரோட்டில் சென்று, மைசூரு ரோடு அல்லது கனகபுரா சந்திப்பு வழியாக சென்று கோவிலை அடையலாம்.
* மெட்ரோ ரயிலில் சென்றால் ஆர்.ஆர்.நகர், கெங்கேரி, பனசங்கரி மெட்ரோ ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்