சிவகாசி; விருதுநகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொக்கலாஞ்சேரியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, 13 ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கால பழமையான கோயில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கொக்கலாஞ்சேரி விருதுநகரில் இருந்து 10 கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. இங்கு பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், பிரேம் கள ஆய்வு செய்தனர். இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், கோயிலின் கட்டட அமைப்பு பாண்டியர் கால கட்டடக்கலையை நினைவூட்டுவதாக உள்ளது. கோயில் சுற்றுச்சுவர், கருவறை போன்ற அனைத்துப் பகுதிகளிளும் பாண்டியர் காலம் முதல் பிற்காலக் கல்வெட்டுக்கள் வரை காணப்படுகின்றன. இந்த கோயிலின் கல்வெட்டுக்களில் வெவ்வேறு இடங்களில் கோமாறப்பன்மரான என்ற வாசகம் வருகின்றது. இதிலிருந்து மாறவர்மன் என்றும், வேறு ஒரு இடத்தில் சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு 8 வது என வருகிறது. இந்த இரண்டையும் இணைத்து பார்க்கும் பொழுது மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 8 வது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. கல்வெட்டுக்களில் , வெண்பு நாடு, பூங்கா நாடு, செங்குடிநாடு என 3 நாடுகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்றுமே அருகருகே அமைந்தவை. இதன்மூலம் பல நிர்வாகப் பிரிவுகளுடன் கோயிலுக்கு தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது. பாண்டியநாட்டின் உட்பிரிவுகளில் இக்கோயில் எந்த பகுதியைச் சேர்ந்தது என அறிய முற்படும்பொழுது இக்கோயில் அமைந்துள்ள பகுதி பாண்டிய நாட்டின் உட்பிரிவான செங்குடிநாட்டுப்புளியங்குடி என குறிப்பிடப்படுவதைக் காணமுடிகிறது.
கல்வெட்டின் ஒரிடத்தில் விக்கிரமபாண்டீச்சுரமுடையார் என்றும் மற்றோர் இடத்தில் விண்ணகரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விக்கிரமபாண்டீச்சுரமுடையார் என்பது சிவன் கோயிலையும், விண்ணகரம் என்ற சொல் பெருமாள் கோயிலையும் குறிக்கின்றது. தற்போது காமாட்சிஅம்மன் கோயில் என்று அழக்கப்படும் இக்கோயிலின் கருவறையில் சப்தகன்னியர் சிலையை வைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் கோயிலின் இடிபாடுகளுக்கிடையில் அய்யனார் சிலை உள்ளது. கல்வெட்டுகளும் வெவ்வேறு கால்கட்டத்தைச் சேர்ந்ததாக உள்ளது. இதன்மூலம் வெவ்வேறு காலகட்டங்ளில் வெவ்வேறு தெய்வங்கள் வைத்து வழிபட்டிருக்கலாம் என அறிய முடிகிறது. கல்வெட்டு ஒன்றில் காராண்மைத்தானம் என்றும் மற்றொரு கல்வெட்டில் இடத்தை பிரமாணம் பண்ணிக்கொடுத்த ஊரோன் என்றும், கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க என்றும் வருவதால் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட தான நிலங்களைப் பற்றியும், கோயில் நிவந்தங்களுக்காக கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.
இந்த கல்வெட்டுக்களின் மூலம் 13 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் காலஒட்டத்தில் சிதைவடைந்த பின்னர் மீண்டும் 17 மற்றும் 18 வது நுாற்றாண்டில் சீரமைக்கப்பட்டு வழிபட்டு வந்துள்ளமையை அங்குள்ள பிற்கால கல்வெட்டின் மூலமும், மாற்றி அடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மூலமும் அறியமுடிகிறது. இந்தக் கோயில் குறித்த விரிவான வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு, கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு அதன் கால கட்டம் மற்றும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். தொல்லியல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பழமையான சின்னத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.