கல்வி கற்றவனே கண்கள் கொண்டவன். கற்காவிட்டால் கண்ணிருந்தும் பயனில்லை. கல்வியின் பெருமை பற்றி திருவள்ளுவர், கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்கிறார். மகாபாரதத்தில் யட்சனாக வரும் எமதர்மன் தன் மகனைச் சோதிப்பதற்காக, விலை மதிப்பற்ற சொத்து எது? எனக் கேட்கிறான். இதற்கு தர்மர், கல்வியே விலை மதிப்பற்ற சொத்து என்கிறார். இப்படி பெருமை மிக்க கல்வியின் தெய்வமான சரஸ்வதியை பூஜிக்கும் நாள் இன்று.
கல்வி கேள்வி, கலை, கலாசாரம், விஞ்ஞானம், மெய்ஞானம் என அனைத்திற்கும் தெய்வம் சரஸ்வதி. வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சரஸ்வதியை போற்றுகிறது. வாக்தேவி, ஜ்யோதிஸ்வரூபா, வாஜினீவதி, ருதாவரி என அழைக்கப்படுகிறாள். வெண் பட்டு உடுத்தி வெள்ளை தாமரையில் வெள்ளை அன்னப் பறவை மீது அமர்ந்து அருள்புரிகிறாள். இன்று புத்தகங்கள், படிப்பிற்குத் தேவையான சாதனங்களை வழிபட்டால் ஞானம், கல்வியறிவை வழங்குவாள்.
கொண்டைக்கடலை நைவேத்யம்; தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் தெரியுமா?
சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவரும் ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியிருப்பர். மனத்துாய்மை, சாந்தம், ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை இருவரிடமும் இருக்கும். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஜாதகத்தில் குருபலம் இல்லாதவர்கள் குருவருள் வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து வழிபடுவர். மனித வாழ்வின் உயிர்நாடியான கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.
அறிவு வளர்ச்சிக்கு...; வெள்ளை தாமரை. வீணையின் நாதம், புலவர்களின் உள்ளம், வேதம் சொல்லும் வேதியர், தர்மத்தை உபதேசிக்கும் துறவிகள். குழந்தைகள் பேசும் மழலை மொழி. குயில் ஓசை, கிளியின் நாக்கு இவையே சரஸ்வதியின் இருப்பிடம் என்கிறார் மகாகவி பாரதியார். ஞானத்திற்கு அதிபதியான இவளை வழிபட்டால் அறிவு வளரும்.
தொழில் சிறக்க..; ஆற்றலின் இருப்பிடமாகத் திகழ்பவள் பராசக்தி. அவளை வழிபட்டால் வல்லமை உண்டாகும். வலிமை பெற்ற ஒருவனுக்கு, சாதாரண புல்லும் கூட ஆயுதம் என்பதை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பர். அவரவர் தொழிலைச் செய்வதற்கான கருவியே ஆயுதம். கல்விக்கு புத்தகம், எழுதுபொருட்கள் அடிப்படையாக இருக்கின்றன. வியாபாரம் செய்பவருக்கு தராசு, படிக்கல் அவசியம். இவ்வாறு அவரவர் ஆயுதங்களை சரஸ்வதியாகக் கருதி வழிபடுவதால், சரஸ்வதி பூஜைக்கு ஆயுதபூஜை என்றும் பெயருண்டு. புரட்டாசி நவமி திதியில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து ஆயுதங்களுக்கு பூஜை செய்வர். மறுநாள் விஜயதசமியன்று அவற்றைப் பயன்படுத்தினால் தொழில்வளம் சிறக்கும்.
திருஞான சம்பந்தர் சொல்றதை கேளுங்க!; சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர் யாகத்தை அழித்ததுடன் யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார். மேலும் அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞான சம்பந்தர், நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என பாடியுள்ளார். சீர்காழி கல்வித்தலமாகும். மாணவர்கள் ஒருமுறையேனும் சீர்காழி சென்று அங்குள்ள தோணியப்பரையும், அம்பாளையும், திருஞான சம்பந்தரையும் வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர்.
மூன்றாம்பிறை ரகசியம்: ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவள் என்பதால் கலைமகள் என்று சரஸ்வதியை அழைப்பர். கலை என்றால் வளர்வது. அதுபோல கல்வியும் வளர்ந்து கொண்டே செல்லும். அதற்கு கரை என்பதே இல்லை. மனிதன் தன் வாழ்நாளுக்குள் எல்லா கலைகளையும் கற்று விட முடியாது. இதையே கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு என்பர். சரஸ்வதியின் தலையிலும் சிவபெருமானைப் போல மூன்றாம் பிறை இருக்கும். இதற்கு காரணம் மூன்றாம் பிறையைப் போல சிறிதளவு கலைகளையே தான் அறிந்திருப்பதாகவும் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது என அடக்கமுடன் இருக்கிறாள். அறிஞராக இருந்தாலும் மனிதனுக்கு பணிவு அவசியம் என இதன் மூலம் உணர்த்துகிறாள்.
மதுரையும் மறைக்காடும்; வேதங்கள் மனித வடிவில் வந்து சிவபெருமானை பூஜித்த தலம் நாகை மாவட்டம் திருமறைக்காடு. இக்கோயிலிலுள்ள அம்மனின் பெயர் யாழைப் பழித்த மொழியாள். அதாவது யாழின் இசையை விட இனிய குரல் கொண்டவள் என்பது பொருள். இதனால் இங்கு சரஸ்வதி வீணையை இசைக்க வெட்கப்பட்டு வீணையின்றி காட்சி தருகிறாள். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சரஸ்வதியிடம் வீணை கிடையாது. ஏனெனில் வீணை ஏந்தியபடி சியாமளையாக(வீணை ஏந்திய அம்பிகை)இங்கு மீனாட்சியம்மன் இருப்பதாக ஐதீகம்.
இன்றே நல்லதை செய்யுங்க; மாணவர்களுக்கு வாரியார் சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள்.ஆசிரியரிடம் கற்ற நல்ல விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். பணம் தேடுவதோடு நல்லறிவைத் தேடவும் படிப்பது அவசியம். திருக்குறள், ராமாயணம், மகாபாரதம் போன்ற நுால்களைத் தினமும் படியுங்கள். மாணவர்களுக்கு படிப்புடன் பக்தியும் அவசியம். அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறு பூசி கடவுளின் திருநாமத்தைச் சொன்ன பின்னரே அன்றாட பணிகளைத் தொடங்க வேண்டும்”சரஸ்வதி பூஜை முதல் இந்த நல்ல பழக்கத்தை கடைபிடிப்போமா!.
பூஜைக்குரிய நட்சத்திரம்; நவராத்திரியில் நவமியன்று சரஸ்வதி பூஜை நடத்துவர். ஆனாலும் சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமான மூலத்தில் தொடங்கி, பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் சரஸ்வதியை வழிபட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. திருவாவடுதுறை ஆதினத்தில் புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தன்று ஏட்டுச்சுவடிகளில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்கின்றனர்.