டிசம்பர் 02,2023
சபரிமலை: சபரிமலையில் படி பூஜை நடைபெறாத நாட்களில் மலை தேவதைகளை வணங்கும் வகையில் மேல்சாந்தி மற்றும் பூஜாரிகள் சரணம் விளிக்கின்றனர்.
படி பூஜை நேரத்தில் நீண்ட நேரம் பக்தர்கள் படி ஏற முடியாது என்பதால் மண்டல மகர விளக்கு காலத்தில் படி பூஜை நடைபெறுவதில்லை. மகரஜோதிக்கு பின்னர் நான்கு நாட்கள் மட்டும் படி பூஜை நடைபெறும்.மாத பூஜைக்காக நடை திறக்கும் போது எல்லா நாட்களிலும் படி பூஜை உண்டு.18 மலைகளில் குடிகொண்டுள்ள மலை தேவதைகளை திருப்திப்படுத்தும் வகையில் படி பூஜை நடைபெறுகிறது. எனவே படி பூஜை இல்லாத நாட்களில் மலை தேவதைகளை திருப்திப்படும் வகையில் தந்திரி தலைமையில் மேல் சாந்தி மற்றும் பூஜாரிகள் கொடிமரம் அருகே நின்று 18 மலை தேவதைகளின் பெயர் சொல்லி சரணம் விளிக்கின்றனர். பின்னர் 18 வது படியில் கற்பூரம் ஏற்றி அதன் பக்கத்தில் உள்ள மணியை ஒலிக்க செய்வர். எல்லா நாளும் இரவு அத்தாழ பூஜை நேரத்தில் இந்த சடங்கு நடைபெறுகிறது. சபரிமலையில் இரவு அத்தாழ பூஜைக்கு ஐயப்பனுக்கு நிவேத்யம் செய்யப்படும் பானகம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.