நவம்பர் 18,2024
சபரிமலை: சபரிமலையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில் சர்வதேச ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியை நடத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது. நுாற்றுக்கணக்கான உலக நாடுகளில் வாழும் ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் சர்வதேச ஐயப்ப சங்கமம் நடைபெற உள்ளது. சிங்கப்பூரிலிருந்து வந்த பக்தர் குழுவினர் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நடத்தினால் அதற்கு போதுமான அனைத்து ஒத்துழைப்பை தருவதாக தேவசம்போர்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் 25 நாடுகளில் உள்ள ஐயப்ப பக்தர்களின் பட்டியலையும் அவர்கள் தேவசம்போர்டு அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
இந்த சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுதும் சபரிமலை ஐயப்பனின் மகத்துவத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று தேவசம்போர்டு கருதுகிறது. அதுமட்டுமல்லாமல் வெளிநாடு வாழும் ஐயப்ப பக்தர்களின் உதவியுடன் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் செய்ய தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் முடிந்ததும் இந்த சங்கமம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2018 -ல் ஏற்பட்ட பெருவெள்ளம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா போன்றவற்றால் மகர விளக்கு சீசனில் பம்பையில் நடைபெற்று வந்த பம்பா சங்கமம் நிகழ்ச்சியும் தடைபட்டுள்ளது. அதை இந்த ஆண்டு முதல் தொடங்குவதற்கு தேவசம்போர்டு தயாராகி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்கள், திரையுலக பிரமுகர்கள், சபரிமலை ஐயப்பனை பற்றி பாடியுள்ள பாடகர்கள் உள்ளிட்டோரை அழைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.