திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ஏன்?; வழிபடுவது எப்படி?



கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும்  மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். கார்த்திகை தீபத்தின் முதல்நாள் ஏற்றப்படும் தீபம் பரணி  தீபமாகும். இது முருகனுக்குரிய வழிபாடு. மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது. கார்த்திகை மாத வளர்பிறை  கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவதே முறையான  வழிபாடாகும். மாலை மாவிளக்கு ஏற்றி அந்த விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும். கார்த்திகை அன்று  பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். கார்த்திகை அன்று மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா விளக்குகளையும் ஏற்ற  வேண்டும். வாசலில் சிறு விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.


அண்ணாமலை தீபம்: கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர்  எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத்  தெரிகின்றது. அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது  தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று  தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும்  கருதப்படுகிறது. ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது  நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச்சுடர் எண்ணெயை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர  வேண்டிய அகத்தோற்றமாகும்.  வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான  அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. திருவிளக்கால் அறியத்தக்க  மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்.


தீபமேற்றுவது ஏன்?; கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம்  நடத்தினார். திரிபுரதகனத்தின் போது,  சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது. 


தீபம் என்பது லட்சுமி தேவியின் வடித்தையும், சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும், பார்வதியின் சக்தியையும் ஒன்றாக  சேர்த்திருப்பது.   எனவே மூன்று தேவிகளின் வடிவமான தீபத்தைக் காணும் எந்த ஓர் மனிதனும், புழு, பூச்சி, பறவைகள் கூட நற்கதி  எய்தும் என்பது ஆன்றோர் மொழி. எனவே தான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.எனவே கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி  வழிபட்டால், சிவனின் அருளுடன், முத்தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்