டிசம்பர் 19,2024
சபரிமலை; 40 ஆண்டுகளுக்கு முன் எரிபொருள் இல்லாமல் பம்பையில் தரையிறக்கிய ஹெலிகாப்டரின் பைலட் டி.பி. சிங் அவுஜலா, இருமுடி கட்டு ஏந்தி வந்து ஐயப்பனை வழிபட்டார்.
1985 மே 18. கொச்சி கப்பற்படையில் உள்ள கடல் தேடுதல் விமானம் காணாமல் போனது. அதை தேடுவதற்காக நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டரின் பைலட்டாக இருந்தவர் டி.பி. சிங் அவுஜலா . தேக்கடியில் இருந்து ஆரம்பித்து காட்டுப் பகுதியில் பகல் முழுவதும் தேடி ஹெலிகாப்டர் பறந்தது. அப்போதுதான் எரிபொருள் குறைந்ததை பைலட் கண்டார். ஆனால் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டரை தரை இறக்க இடம் தேடிய போது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியில் மலைகளுக்கு இடையே தெரிந்த ஒரு சிறு மைதானத்தை கண்டதும் அதில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினார். அது பம்பை பஸ் ஸ்டாண்டாக இருந்தது. இது பற்றி அவர் கூறுகிறார். அன்று பம்பை பஸ் ஸ்டாண்டில் ஒரு கட்டடம் மட்டுமே அப்போது இருந்தது. சீசன் இல்லாததால் எவரும் அங்கு இல்லை. ஒரு இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தேன். எனக்கு அபயம் தந்தது ஐயப்பன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அன்று நான் ஒரு முடிவை எடுத்தேன். ஐயப்பனை வந்து கண்டு வணங்க வேண்டும் என்று. அதன்படி இப்போது வந்துள்ளேன். பம்பை இன்று மிகவும் மாறிவிட்டது என்றார். தன்னுடன் நீண்ட காலம் பணியாற்றிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேணல் ஸ்ரீ நாகேஷ் டி நாயர் மற்றும் மனைவியுடன் பம்பை வந்தார். இங்கிருந்து இருமுடி எடுத்து நீலிமலை வழியாக ஐயப்பன் சன்னிதானத்துக்கு வந்து வழிபட்ட போது அவரது கண்ணில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. நீலிமலை ஏற்றமும் அப்பாச்சி மேடு 18 படி ஏறிய களைப்பெல்லாம் ஐயப்பனை கண்டு வணங்கிய போது காணாமல் போய்விட்டதாக அவர் தெரிவித்தார். சபரிமலையில் இருந்து கொச்சி திரும்பிய அவர் அங்கு நடைபெற்ற கப்பற்படையின் ஏவியேஷன் பேஸ் வைர விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். பஞ்சாப் அரசின் தலைமை பைலட்டாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சண்டிகளில் வசித்து வருகிறார்.