மேட்டுப்பாளையம்; சிறுமுகை ஐயப்பன் கோவிலில், படி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறுமுகை எலகம்பாளையத்தில், கீழ் சபரி ஐயப்பன் கோவிலும், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலும் உள்ளது. இக்கோவிலின், 50வது ஆண்டு மண்டல பூஜையும், ஐயப்பன் சுவாமி தேர் பவனியும் நடந்தது. 1ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன், ஐயப்பன் சுவாமிக்கு அஷ்டாபிஷேகமும், லட்சுமி ஹயக்ரீவருக்கு பஞ்சாபிஷேகமும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இரண்டாம் நாள் ஐயப்பன் சுவாமியின் தேர்பவனி செண்டை மேளத்துடன் புறப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஆலாங்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தண்ணீர் தடம், எலகம்பாளையம் முருகன் கோவில், ராமர் கோயில் வழியாக தியேட்டர் மேடு வந்தது. அங்கிருந்து சத்தி சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் சென்று, அங்கிருந்து நால்ரோடு வழியாக, தேர் பவனி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மூன்றாம் நாள் காலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, 108 கலச பாலாபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 7:00 மணிக்கு படி பூஜை நடந்தது. 18 படிகளில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. ஒவ்வொரு படியிலும் பூ மாலை, தேங்காய் வைத்த பின், படி பூஜை செய்தனர். பின்பு, 7:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.