பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் நடந்த, 85வது குருபூஜை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை, 5:00 மணிக்கு ஆரத்தியுடன் விழா துவங்கியது. பெரியநாயக்கன்பாளையம் பஜனைக்குழு, பாலமலை ரங்கநாதர் பஜனை குழு, அவினாசி லிங்கம் மனையியல் பல்கலை மாணவிகளின் பஜனை, தண்டபாணி நாம சங்கீர்த்தனை குழுவினரின் பஜனை, மேட்டுப்பாளையம் ஸ்ரீ வாசுதேவன் குழுவினரின் பஜனை, சுவாமி ஹரிவ்ரதானந்தரின் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு வித்யாலயா கொடியை சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, 8:00 மணி அளவில் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியின் சுயநிதி பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலை மற்றும் கல்வி பொருட்காட்சி திறப்பு விழா நடந்தது.
குருபூஜை விழாவை ஒட்டி மாநில அளவில் நடந்த இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வித்யாலயத்தில் நீண்ட காலமாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். முற்பகல், 11:00 மணிக்கு சென்னை செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியன் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும், பிற்பகல், 1:30 மணிக்கு வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை, 3:30 மணியளவில், ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாலை இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவை ஒட்டி அன்னதானம், வித்யாலயா வரலாறு புகைப்பட கண்காட்சி, ராமகிருஷ்ண இயக்க புத்தக கண்காட்சி, ராமாயண வரலாறு பூங்கா விளையாட்டுகள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், வித்யாலய வளாகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்கள், பணிபுரிந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.