கடலூர்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
சிதம்பரம் தமிழகத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் புகழ்பெற்ற பூலோக கைலாசமாக விளங்குகின்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருடத்திற்கு இரண்டு முறை தேர் திருவிழா நடைபெறும். ஒன்று ஆணி திருமஞ்சனம் மற்றொன்று மார்கழி ஆருத்ரா தரிசனம். இந்த மார்கழி ஆருத்ரா தரிசனம் மாணிக்கவாசகருக்கு காட்சி தந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த மார்கழி ஆருத்ரா தரிசன துவக்க விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 7 மணி அளவில் நடராஜர் சன்னிதி உள்ள பொற்சபை நேர் எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றி விழா துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும்.
தினசரி நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைக்கப்படும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வானத்தில் சிவபெருமான் நட்சத்திரமாக தோன்றியதாகவும், மாணிக்கவாசருக்கு காட்சி கொடுத்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது, இந்த மார்கழி ஆருத்ரா தரிசனத்தில் தினசரி மாணிக்கவாசகர் கோவிலுக்குள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நடராஜப் பெருமானுடைய சன்னதியில் வைத்து தீபார்த்தனைகள் காண்பிக்கப்படும். சிறப்பு மிக்க இந்த விழாவில் வரும் 12ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. 13ம் தேதி மாலை 3 மணி அளவில் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரியும் நடனம் ஆடிய படியே பொதுமக்களுக்கு காட்சியளிப்பார்.