உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை ஸ்தல விருச்சமாக அமைந்துள்ளது.
புராண, இதிகாசத்துடன் தொடர்புடைய உத்தரகோசமங்கையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. உத்தரகோசமங்கையில் சந்தனம் படி களைதல் மற்றும் புதிய சந்தனம் சாப்பிடப்படும் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரகோசமங்கைக்கு வருகின்றனர். இன்று மாலை 6:00 மணிக்கு கோயில் முன்புறமுள்ள மங்கள விநாயகர் கோயிலில் இருந்து அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்கியது. உத்தரகோசமங்கை வடக்கு பகுதியில் உள்ள தனி சன்னதியில் அமைந்துள்ள பச்சை மரகத நடராஜர் சிலை உலகப் புகழ்பெற்றதாகும். வருகிற ஜன., 12 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தன காப்புகள் களையும் நிகழ்ச்சி நடக்கிறது. மூலவர் மரகத நடராஜரின் திருமேனியில் 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடக்கிறது. பின்னர் சந்தனாதி தைலம் பூசப்படுகிறது. இரவு 11:30 மணிக்கு மேல் திரையிடப்பட்டு புதிய சந்தன காப்பு மற்றும் அலங்கார மலர் மாலைகள் சூடப்படுகிறது. மறுநாள் ஜன., 13 அதிகாலை 2:00 மணிக்கு பிறகு அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாசக பெருமானுக்கு, காட்சி கொடுத்து சோடச உபசார அலங்கார தீபாராதனையும் நடக்க உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை சந்தனம் படி களையப்பட்ட மூலவர் மரகத நடராஜரின் திருமேனியை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள், சிறப்பு பஸ் வசதி உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகமும் செய்கின்றனர்.