சென்னை; மகா கும்பமேளாவுக்கு, கூடுதல் ரயில்கள் தேவைப்படுவதால், தெற்கு ரயில்வேயில், தற்போது இயக்கத்தில் உள்ள, 10 குறுகிய துார ரயில்களின் பெட்டிகள் குறைத்து இயக்கப்படுகின்றன. இதனால், பயணியர் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் வரும் 13ம் தேதி முதல் பிப்., 26 வரை, 45 நாட்கள் மகா கும்பமேளா நடக்கிறது. இதில், 43 கோடி பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, பல்வேறு நகரங்களில் இருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கு கூடுதல் ரயில் பெட்டிகள் தேவைப்படுவதால், தெற்கு ரயில்வேயில், குறுகிய துாரத்தில் இயக்கப்படும் ‘மெமு’ வகை ரயில்களில், தற்காலிகமாக பெட்டிகள் குறைத்து இயக்கப்படுகின்றன. கடந்த மாதம் 30ம் தேதி முதல், 10 மெமு பயணியர் ரயில்களில், தலா இரண்டு பெட்டிகள் குறைக்கப்பட்டு, 10 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதனால், எழும்பூர் – புதுச்சேரி, புதுச்சேரி – திருப்பதி, திருப்பதி – புதுச்சேரி, தாம்பரம் – விழுப்புரம், விழுப்புரம் – தாம்பரம், கடற்கரை – விழுப்புரம், திருவண்ணாமலை – தாம்பரம் உள்ளிட்ட ரயில்களில், பயணியர் நெரிசல் அதிகரித்துள்ளது.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் ‘மெமு’ ரயில்களில், ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது, 12 பெட்டிகள், 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளதால், அலுவலக நேரங்களில், பயணியர் உள்ளே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கும்பமேளாவுக்கு இங்கிருந்து ரயில்களை கொண்டு சென்று இயக்குவதில் தவறு இல்லை. அதேநேரம் இங்குள்ள பயணியர் பாதிக்காமல் இருக்க, போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், பயணியர் சிரமத்தை போக்க, போதிய அளவில் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புறப்பட்டது சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே சார்பில் சென்னை, கன்னியாகுமரி, மங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மகா கும்பமேளாவுக்கு ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து முதல் சிறப்பு ரயில், நேற்று மாலை 4:50 மணிக்கு புறப்பட்டது. ஏ.பி.ஜி.பி., எனப்படும் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில், சிறப்பு ரயிலுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, ஓட்டுனருக்கு பொன்னாடை அணிவித்தும், பயணியருக்கு இனிப்பு வழங்கியும் வழியனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்தின் தென் மண்டல செயலர் சுந்தர் கூறியதாவது: மகா கும்பமேளாவை ஒட்டி சிறப்பு ரயில்களை இயக்குமாறு, ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தோம். அதன்படி, சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலில், பிரயாக்ராஜ், வாரணாசி, அயோத்திக்கு பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என, ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.