சென்னை; மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலுக்கு, 1.5 கோடி ரூபாயில், வெள்ளித்தகடுகள் போர்த்தப்பட்ட உற்சவர் புறப்பாடுக்கான யானை வாகனம் மற்றும் அம்பாரி ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு, 1.50 கோடி ரூபாயில், யானை வாகனத்திற்கு வெள்ளித் தகடு போர்த்தும் பணி மேற்கொள்ளப்படும் என, கடந்தாண்டு சட்டசபையில், அறிவிப்பு வெளியானது. அதன்படி, கபாலீஸ்வரர் கோவிலில் உற்சவர் புறப்பாட்டில் இருந்து வரும் மரயானை வாகனம் மற்றும் அதன் மீது பொருத்தப்படும் அம்பாரி ஆகியவற்றிற்கு, உபயதாரர் அளித்தி, 1.50 கோடி ரூபாயில், 136.62 கிலோ எடையில், நகாசு வேலைகளுடன் வெள்ளித்தகடுகள் போர்த்தும் பணி முடிக்கப்பட்டது. இதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வெள்ளித் தகடுகள் போர்த்தப்பட்ட யானை வாகனம் மற்றும் அம்பாரியை, பங்குனிப் பெருவிழா உதசவத்திற்கு இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., வேலு, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.