மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் கண்ணை கவரும் வேலைபாடுகளுடன் கூடிய சல்லடம் எனும் ஆடை அணிந்து கள்ளழகரை வரவேற்று ‘கோவிந்தா’ கோஷமிட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்தும், திரி எடுத்து ஆடியும் நேர்த்திக்கடன் செலுத்துவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதற்காகவே புதுமண்டபம் அருகேயுள்ள குன்னத்துார் சத்திரத்தில் 3 மாதமாக நேர்த்திக்கடன் ஆடைகள் தயாரிக்கப்பட்டன. நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை தொடர்ந்து, நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஆடைகளை வாங்க பக்தர்கள் வர ஆரம்பித்துள்ளனர்.
50 ‘செட்’ ரெடி; ராமச்சந்திரன், டெய்லர்: சித்திரை திருவிழா காலங்களில் கூட்டம் அதிகரிக்கும் காரணத்தால் 3 மாதத்திற்கு முன்பே துணிகள் தைக்க தொடங்கி விடுவோம். பாரம்பரிய முறையில் சல்லடம் தைத்து கொடுக்கிறோம். 50 ‘செட்’ வரை ரெடியாக வைத்திருப்போம். காட்டன், வெல்வெட் துணிகள் பயன்படுத்துவோம். வேலைப்பாடுகளுடன் தைப்பதால் தினமும் 2 மட்டுமே தைக்க முடியும். ரூ. 500 முதல் ரூ. 1200 வரை விற்கிறோம்.
கூரியர் மூலம் டெலிவரி; முருகேசன், விற்பனையாளர்: கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்தத்தை கணக்கிட்டு தான் விற்பனை தொடங்கும். மாலைகள், தோப்பறை துருத்தி, சுவாமி வேடங்கள் போடுபவருக்கான துணி, நகை, செட், சலங்கை, உரும கொட்டான், சிறியது முதல் பெரிய அளவிலான திரிகள், தடி உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறோம். இந்தாண்டு விலைவாசி ஏற்றத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்துள்ளோம். சிலர் திருவிழா முதல் நாட்கள் வருவர். எனவே மற்ற மாவட்ட மக்களுக்கும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கிறோம். பாரம்பரியம் மாறமால் அனைத்தும் தயார் செய்து வருகிறோம்.
3 தலைமுறைகளாக நேர்த்திக்கடன்; ராஜா, சமயநல்லுார்: 3 தலைமுறைகளாக திரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறோம். இந்தாண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஏப்.27 முதல் விரதம் இருந்து வருகிறேன். மீனாட்சி அம்மன் தேரோட்டத்தன்று புறப்படுவோம். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் திரி இறக்கி வைக்கப்படும். பாரம்பரியமாக கடைபிடிக்கும் பொருட்களில் வீட்டில் உள்ளதையே பயன்படுத்துவோம். சில பொருட்கள் மட்டுமே வாங்குவோம். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ இத்திருவிழா எனக்கு கற்று தந்துள்ளது.
பொருட்கள் விலை அதிகரிப்பு; அழகுராஜன், சிந்தாமணி: கள்ளழகருக்கு 15 ஆண்டுகளாக தண்ணீர் பீய்ச்சிகிறேன். மழை வேண்டியும், விவசாயம் காத்திடவும் எப்போதும் வேண்டிக்கொள்வேன். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் தண்ணீர் பீய்ச்ச தொடங்கிறோம். குழந்தைகள் அதிகளவில் வருவர். அதிக அழுத்ததுடன் நீர் அடித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே துருத்தி பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டும். இந்தாண்டு அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. விலையை சற்று குறைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.