உத்தரகாண்ட்; மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக செப்டம்பர் 1 முதல் 5 வரை நிறுத்தப்பட்டிருந்த சார் தாம் யாத்திரைக்கான யாத்ரீகர்களின் பதிவு மற்றும் செயல்பாடு இன்று சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
·
சார் தாம் யாத்திரை என்பது இமயமலையில் உயரமாக அமைந்துள்ள நான்கு புனித தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவற்றின் புனித யாத்திரை ஆகும். இந்தியில், சார் என்றால் நான்கு என்றும், தாம் என்பது புனித தலங்களைக் குறிக்கிறது. இந்தாண்டுக்கான சார் தாம் யாத்திரை, மோசமான வானிலை காரணமாக செப்டம்பர் 1 முதல் 5 வரை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை நின்றதால் இன்று மீண்டும் துவங்கியது. இதற்கிடையில், இந்த ஆண்டு பருவமழையின் போது ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்யவும், எதிர்காலத்தில் உள்கட்டமைப்பு கட்டமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்கவும் ரூ.5,702.15 கோடி சிறப்பு உதவி வழங்குமாறு உத்தரகாண்ட் அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வு செயலாளர் வினோத் குமார் சுமன், இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு கூடுதல் செயலாளருக்கு விரிவான குறிப்பாணையை அனுப்பியுள்ளார். இந்த ஆண்டு இயற்கை பேரழிவு காரணமாக, பொதுப்பணித் துறை (PWD) மற்றும் பொது சாலைகள் சுமார் ரூ.1,163.84 கோடி நேரடி சேதத்தை சந்தித்துள்ளதாக சுமன் தெரிவித்தார்.