ஜனவரி 06,2026
சபரிமலை: பக்தர்களின் நீண்ட வரிசை காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆன்லைன் வழிபாடு முன்பதிவு செய்தவர்களை முன்னுரிமை அடிப்படையில் சன்னிதானத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சபரிமலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை போன்ற அனைத்து பூஜைகளுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்த பக்தர்கள் அதற்கான கூப்பன்களுடன் சன்னிதானம் வந்து அந்த பூஜைகளில் கலந்து கொள்ளலாம். ஆனால் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பம்பையில் இருந்து பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சன்னிதானம் வர முடியாத நிலை காணப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் தாங்கள் முன்பதிவு செய்த பூஜையில் கலந்து கொள்ள முடியாமல் கவலையுடன் திரும்புகின்றனர். ஆன்லைன் முன்பதிவு கூப்பன் வைத்திருப்பவர்களை முன்னுரிமை அடிப்படையில் மரக் கூட்டத்திலிருந்து சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானம் வர அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த விஷயத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவெடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.