ஜனவரி 06,2026
சபரிமலை; சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது. படியில் பக்தர்கள் ஏறுவதை வேகப்படுத்தி நிலைமையை சீராக்க போலீசார் முயற்சிக்கின்றனர்,
சபரிமலையில் நடப்பு மகர விளக்கு கால சீசன் கடந்த டிச., 30-ம் தேதி மாலை தொடங்கியது. 31-ம் தேதி முதல் நெய்யபிஷேகம் தொடங்கியது. அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வரத் தொடங்கியது. பம்பையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பம்பையில் இருந்து பக்தர்கள் மலை ஏறுவதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் பம்பை மணல் பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டு கட்டம் கட்டமாக மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் வரும் வழியில் மீண்டும் சரங்குத்தியில் சியூ காம்ப்ளக்ஸ் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சன்னிதானத்திற்கு அனுப்பப்பட்டனர். இதனால் ஒரு பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆவதாக தெரிவித்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே மூலிகை குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது. இது ஆறுதலாக இருந்தாலும் குழந்தைகளுடன் நீண்ட நேர காத்திருப்பில் இருந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.
இதற்கிடையில் 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி நிலைமையை சீராக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு நிமிடத்திற்கு 4000 முதல் 4200 பக்தர்கள் வரை ஏற்றப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர் எனினும் வயது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும்போது இதில் தொய்வு ஏற்படுவதாக போலீசார் கூறுகின்றனர். பொதுவாக போலீசாரின் ஒருநாள் பணி மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 18 படிகளில் மட்டும் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு போலீஸ் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 18 படிகளின் இரு பக்கத்திலும் 15 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 15 நிமிடம் இவர்கள் பணி நேரமாகும் மொத்தம் ஆறு முறை இவர்கள் படிகளில் பணியில் ஈடுபடுவார்கள். படிகளில் பக்தர்கள் வேகமாக ஏறினால் மட்டுமே கியூவின் நீளத்தையும், காத்திருப்பு நேரத்தையும் குறைக்க முடியும் என்பதால் அதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.