பாலக்காடு; ஸ்ரீராமர் கோவில் ஐம்பொன் சிலைகள் திருட்டுப் போனது தொடர்பு கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேரளா மாநிலம் விக்டோரியா கல்லூரிக்கு அருகிலுள்ள தொறப்பாளையத்தில் பகுதியில் உள்ளது அயோத்தி ஸ்ரீராமர் கோவில். இங்கு இன்று அதிகாலை கோவிலைத் திறந்து பூஜைக்கு வந்த பூசாரி கோவில் ஓடு பிரித்து உள்ளே நுழைந்து ஐம்பொன் சிலைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தகவலை ஊர் மக்களிடம் தெரிவித்தார். தகவல் அறிந்து பாலக்காடு டவுன் மேற்கு போலீசாரும் மோப்பநாய் படையும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பூசாரி ரமேஷ் கூறியதாவது: கோவிலில் இருந்து ராமன், லட்சுமணன், சீதை மற்றும் அனுமன் சிலைகள் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளனர். கோவிலின் ஓடுகளைப் பிரித்து உள்ளே புகுந்தே இந்தத் திருட்டு நடந்துள்ளது. தற்போது திருடப்பட்டுள்ள இந்தச் சிலைகள், 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பக்தரால் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டவை ஆகும். கோவிலில் உள்ள ஸ்ரீராம பாதுகா (திருவடி) திருடப்படவில்லை. மரத்தினால் ஆன இந்த பாதுகா, ஸ்ரீராம நவமி அன்று கோட்டைக்குள் உள்ள அனுமன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். "அதிகாலை கோவிலுக்கு வந்து கதவைத் திறந்தபோது, அங்கிருந்த ஒரு தட்டு கீழே விழுந்து கிடப்பதைக் கண்டேன். பின்னர்தான் சிலைகளைக் காணவில்லை என்பது தெரியவந்தது. கோவிலுக்குள் இருந்த உருளி (பாத்திரம்) கோவிலின் அருகே வீசி போட்ட நிலையில் கிடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.