காஞ்சிபுரம்: ஹிந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரதசப்தமியான, வரும் 25ம் தேதி தங்க தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தங்க தேரோட்டம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், 36 கோடி ரூபாய் செலவில், புதிதாக தங்க தேர் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 6ம் தேதி வெள்ளோட்டம் நடத்தப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் தங்க தேர் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ரதசப்தமியான வரும் 25ம் தேதி மாலை ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தங்க தேரோட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கோவில் தரப்பில் கூறப்பட்டது. வரும் 25ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் தி.மு.க., கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனால்தான் தேரோட்டத்தை ரத்து செய்துள்ளனர். திட்டமிட்டபடி வரும் 25ம் தேதி தங்க தேரோட்டத்தை நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், ‘‘தேரோட்டம் நடத்த கமிஷனர் அலுவலகத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்,’’ என்றார். இதுகுறித்து ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையினர் கூறியதாவது: தங்க தேரோட்டத்திற்கான ஏற்பாட்டை செய்யுமாறு நான்கு நாட்களுக்கு முன், வாய்மொழியாக கோவில் நிர்வாகத்தினர் உத்தரவு வழங்கினர். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.