பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோயிலில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் வீற்றிருக்கிறார். கோயில் முன்பு காவல் தெய்வம் கருப்பணசாமி 18 படிமீது அமர்ந்துள்ளார். ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு நேற்று உற்சவர் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளினார். காலை 8:30 மணி தொடங்கி ரக்சாபந்தனன், சுந்தரராஜ பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நலுங்கு, சோடச உபச்சாரம் நடந்து, தீப ஆராதனை, சாற்றுமுறை நிறைவடைந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் பட்டண பிரவேசம் வந்தார். ஏற்பாடுகளை பரமசுவாமி நண்பர்கள் குழுவினர் செய்தனர்.