காஞ்சிபுரம்: தமிழகத்தில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதியில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிறப்பு சுதர்சன யாகம் நேற்று நடந்தது.
யாகத்தில் பங்கேற்றபின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ரவுடியிசம், கொலை, கொள்ளை சம்பவங்களே செய்திகளாக வருகின்றன. தமிழகத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் தி.மு.க., அரசு ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாகவே, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி ‘மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் மாற்றத்திற்குத் தயாராகி விட்டனர். போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் திசைமாறிச் செல்வதையும், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தி.மு.க., ஆட்சி அமைந்துள்ளது. நடைபெற உள்ள தேர்தல், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.