விழுப்புரம்: விழுப்புரம் அருகே மரதகபுரத்தில் முஸ்லிம்கள், ஹிந்துக்கள் சார்பில் மொகரம் தீமிதி திருவிழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தில் ஹசேன், உசேன் பாவா தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள், ஹிந்துக்கள் சார்பில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான விழா மொகரம் முதல் நாள் துவங்கி, முஸ்லிம்களும், ஹிந்துக்களும் விரதம் இருந்தனர். இதையடுத்து நேற்று 8ம் நாளில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவுக்காக தேர்முட்டித் தெருவில் உள்ள ஹசேன் உசேன் பாவா தர்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 11:30 மணியளவில் தர்காவின் உள்ளே இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் வழிபாடு செய்தனர். தர்கா முன்பு தீக்குண்டம் ஏற்படுத்தி, இரவு 12:00 மணியளவில் இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் என இரு மதத்தினரும் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.