பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே, திரெளபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, இஸ்லாமியர்கள் சார்பில், சீர் வரிசைகள் கொடுத்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, இக்கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் சார்பில், திரௌபதி அம்மன் கோவிலுக்கு, சீர் வரிசைகள் வழங்க முடிவு செய்தனர். இதன்படி, அம்மனுக்கு பட்டு புடவை, மாலை, பூஜை பொருட்கள் ஆகியவற்றை, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். அதை பெற்ற நிர்வாகிகள், இஸ்லாமியர்களை வரவேற்று ஆரத்தழுவி கொண்டனர். இஸ்லாமியர்கள் கொண்டு வந்த பட்டு புடவை, மாலைகள் உட்பட, சீர் வரிசைகளை அம்மனுக்கு அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இஸ்லாமியர்கள் அம்மனை வழிபட்டனர்.