மயிலாடுதுறை: குளத்தூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குளத்தூர் கிராமத்தில் பழமையானதும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குலதெய்வமாக வழிபடும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கனபதி ஹோமமும், மாலை வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டு முதல்கால யாக பூஜை தொடங்கியது. நேற்று 2 ம் கால பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி முடிந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோ பூஜை செய்த பின்னர் காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. அதனை அடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கோவில் விமான கலசத்தில் புனித நீரை சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பேராசிரியர்கள் அருள், உத்திராபதி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் விஜயேஸ்வரன், விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளர் செந்தில்குமார் ஜி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நைவேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.