திருப்பூர்: ‘அன்பு நிறைந்த பக்தி நெறி வாயிலாக மட்டுமே சிவபெருமானை அடைய முடியும். அடியார் பெருமக்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்,’ என, சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் தொடர் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகிறது.
நேற்றைய வகுப்பில், சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:
சிவபெருமானை பக்தி நெறியால் மட்டுமே பற்ற முடியும். மனம் வாக்கிற்கு எட்டாத அனுபவ நிலையை, திருவாசகத்தில், திருவண்டப்பகுதியில் மாணிக்கவாசகர் சொல்லியுள்ளார். யோக நெறிகளாலோ அல்லது வேறு எந்த நெறிகளாலோ சிவபெருமானை பிடிக்க முடியாது.
அன்பாகிய பக்தி நெறி மட்டுமே அவரை பற்றுவதற்கு உரிய நெறி. வேதங்களின் பாகுபாடுகளை ஆராய்ந்து, தவம், விரதம், ஜபம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களாலும் கூட பெருமானை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது; நுால் வழியாகப் பயின்று, அதன்வழியாக செல்லலாம் என்றால், அதுவும் இயலாது.
எப்பேர்ப்பட்ட முயற்சியும், அன்பின் வழியாகவே பெருமானைச் சென்று அடைய உதவும். வேறு எந்த வழியில் செய்யும் முயற்சியும் பெருமானை சென்றடைய துணை நிற்காது. அனைத்து உயிர்களிடத்திலும், அடியார்கள் மீதும், பெருமான் மீதும் அன்பு கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கே பெருமான் தன் அருளைப் பொழிவான்.
எனவே, பெருமானை அடைவதற்குரிய அன்பு என்பது, இந்த உலகத்திலே எல்லா உயிர்கள் மீதும் நாம் அன்பு பாரட்ட வேண்டும். எல்லாஅடியார்களையும், பெருமானையும் அன்போடு வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.