காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பவளவண்ணர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் பவளவண்ணர் கோவிலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. ஒரு ஆண்டைக் கடந்தும், இதுவரை 60 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்துவதோடு, விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து கோவில் திருப்பணிகள் செயல் அலுவலர் பூவழகி கூறியதாவது: பவளவண்ணர் கோவிலில் 1.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம், மூலவர் சன்னிதி மற்றும் சுற்றுப்பிரகாரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்தவுடன், உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த ஆண்டு ஜன. மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.