மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா மாத பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி வழிபட்டனர்.
சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்மவனம்(மயிலாடுதுறை). அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரிரி கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரி மாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள் இதனால் துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புன்னிய நதிகள் அனைத்தும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வந்து புனிதநீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக ஐதீகம்.
இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு நேற்று ஐப்பசி மாத பிறபபையொட்டி துலா உற்சவ முதல் நாள் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதனையொட்டி திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபாயம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்தநாயகி சமேத ஐய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி இருகரையிலும் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மதியம் 2.20 மணியளவில் சுவாமி தீர்த்தம்கொடுக்க திரளான பக்தர்கள் காவிரியில் புனிதநீராடி சுவாமியை வழிபட்டனர். இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை வேலப்பதம்பிரான் சுவாமிகள், சிவபுரம்வேத சிவாகமபாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார், தருமபுரம் ஆதீனம் கட்டளை சிவகுருநாதம்பிரான், சுப்ரமணியதம்பிரான்சுவாமிகள், அன்பேசிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திரசிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் முக்கிய விழாவாக வரும் நவம்பர் 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், 13ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி திருத்தேரோட்டமும், 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி (கடை முழுக்கு) உற்சவமும் நடைபெறுகிறது. இதேபோல் திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரி நான்கு கால்மண்டபம் பகுதிக்கு எழுந்தருள தீர்த்த பேரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.