உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவம் நடந்தது. மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் அலங்கார கொலு வைக்கப்பட்டிருந்தது. உற்ஸவர் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு மேல தாளங்கள் முழங்க யானை வாகனத்தில் உற்ஸவர் சந்திரசேகர சுவாமி வில், அம்புடன் எழுந்தருளினார். கோயில் அருகே உள்ள வேட்டை வேட்டை மண்டபம் வந்தவுடன் கோயில் சிவாச்சாரியார் நான்குபுறங்களிலும் வில்லிலிருந்து அம்பு எய்தப்பட்டது. பின்னர் உற்ஸவர் கோவிலுக்கு திரும்பினார். சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்ஸவமூர்த்திகளுக்கு விசேஷத் திருமஞ்சனம் நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட கொலுவின் முன்பாக பஜனை நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. இன்று காலை 9:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் கல்யாண ஜெகநாதப்பெருமாள் எழுந்தருளினார். ஜெயராம் பட்டாச்சாரியார் வடகிழக்கு மூலையில் வன்னி மரத்தை சுற்றி அம்பு எய்தினார். உத்தரகோசமங்கை, திருப்புல்லாணியில் இருந்து கொண்டு செல்லக்கூடிய மீதமுள்ள அம்புகள் அரண்மனையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வழங்கப்படுகிறது.