சூலூர்: சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோவிலில் நடந்த, திருக்கல்யாண உற்சவத்தை, ஏராளமான பக்தர்கள் கண்டு மனமுருகினர்.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ திருவேங்கட நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, திருக்கால்யாண உற்சவ திருவிழா பூஜைகள் கடந்த, 16 ம்தேதி மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் துவங்கின. 17 ம்தேதி காலை, யாக சாலை பூஜை முடிந்து, கொடியேற்றம் மற்றும் தேருக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து, தினமும் காலை யாகசாலையில் ஹோமமும், மாலை பெருமாள் புறப்பாடும் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக, திருக்கல்யாண சீர் வரிசை பொருட்களான தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, பலகார, பட்சணங்கள், பூமாலைகளை பக்தர்கள் எடுத்து வந்து சமர்ப்பித்தனர். தொடர்ந்து, கலசங்கள் நிறுவி, ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீ தேவி பூதேவி சமேத திருவேங்கட நாத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பஜனை பாடல்களை பாடி பெருமாளை வழிபட்டனர்.மாலை, எம்பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளினார். திருத்தேரின் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் உலா நடந்தது.. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு அம்பு சேர்வை நடந்தது. இன்று பரிவேட்டை, தெப்ப உற்சவம் மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது. நாளை மகா அபிஷேகம் நடக்கிறது.