திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று விஜயதசமியை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், பொது வழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், இன்று விஜயதசமி மற்றும் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆயுத பூஜையை ஒட்டி, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருப்பினும், நேற்று விஜயதசமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே, மலைப்பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மீதமுள்ள அனைத்து வாகனங்களும், மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், பக்தர்கள் நலன்கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், ஏழு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.