பழநி: பழநி முருகன் கோயிலில் இயங்கி வரும் ரோப்கார் சேவை இன்று பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.
பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் எளிதாக சென்று வர ரோப் கார் சேவை பயன்பட்டு வருகிறது. இச்சேவை மூலம் மூன்று நிமிடத்தில் பழநி முருகன் கோயிலுக்கு சென்று வரலாம். இன்று (அக்.20) நவராத்திரி திருவிழாவில் அம்பு போடும் நிகழ்வை முன்னிட்டு காலை 11:00 மணி அளவில் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11:00 மணியளவில் ரோப்காரில் பத்தர்களை ஏற்றி இயக்கத் துவங்கும் போது அதில் வித்தியாசமான சத்தம் கேட்டதால் ஊழியர்கள் ரோப்காரை இயக்காமல் நிறுத்தி பாதுகாப்பாக பக்தர்கள் இறக்கி விடப்பட்டனர். இதனால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஊழியர்கள் ரோப் கார் இயந்திரத்தில் பணிகள் செய்து வருகின்றனர்
இது குறித்து கோயில் நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில் "பழநி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று (அக்., 20) காலை 11:00 மணியளவில், ரோப்கார் இயந்திர கியர் பாக்ஸ், சாப்டில் பழுது ஏற்பட்டது. அதன் காரணமாக ரோப்கார் இயக்கம் தடைபட்டுள்ளது. கியர் பாக்ஸ் சாப்ட், கோவையில் உள்ள நிறுவனத்திற்கு சரி செய்ய கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கியர் பாக்ஸ் சாப்ட் சரி செய்யப்பட்ட பின் மீண்டும் ரோப்கார் சேவை பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும்." என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.