விழுப்புரம்: துர்க்கையம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம், துர்க்கை முத்துமாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டின் நவராத்திரி விழா, கடந்த 10ம் தேதி கலச பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி நடந்து விழாவில், 9 தினங்களும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்வேறு அவதாரங்களில், துர்க்கையம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, நவராத்திரி நிறைவையொட்டி, இன்று காலை 8:00 மணிக்கு துவங்கி யாகம், வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் அம்மனும், சுவாமியும் மாலை மாற்றிக்கொண்டு, மாங்கல்யம் சாற்றும் முறை நடந்தது. இதில், பெண்கள் பலர் கலந்துகொண்டு வளையல், குங்குமம், தாலி கயிறு, மலர்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள், சீர் வரிசை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.