காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மற்றும் துணை கோயில்களில் கடந்த 10 நாட்கள் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது . இந்த நிலையில் நேற்று கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் கனக துர்கை அம்மனுக்கு சாந்தி அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்ததை தொடர்ந்து இன்று வியாழக்கிழமை அம்மனுக்கு சாகம்பரி தேவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதே போல் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை என்பதால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் முன்னதாக சிறப்பு கலசம் ஏற்பாடு செய்துதோடு சிறப்பு பூஜைகளை கோயிலின் ஆஸ்தான குருக்கள் கருணா குருக்கள் தலைமையில் சிறப்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர், மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து பல வண்ண மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூள் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.