தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகவும், திருப்பதி, ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு இணையானதாகும். நாலாயிரத்திவ்யபிரபந்தம் விளைந்ததலம், எழு ஆழவார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மூலவர், வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாகவும் வரலாறு உடையது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகப்பெருகவிழாவின் தொடர்புடைய சாரங்கபாணி கோவிலில், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், 2028ம் ஆண்டு மகாமகப்பெருவிழா நடக்க உள்ளதால், சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணியை செய்யப்பட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 2.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராஜகோபுரம் உள்ளிட்ட 16 விமானங்களில் திருப்பணி மேற்கொள்வதற்காக, கடந்த அக். 28ம்தேதி பாலாலய பூர்வாங்க பூஜைகள், விஷ்வக்ஷேனர் எழுந்தருளி, புண்யாக வாசனம், திருவாராதனம், பகவத் பாகவத அனுக்ஞை, வாஸ்து பூஜை,ஹோமம், திக்பந்தனமும் நடந்தது.
தொடர்ந்து நேற்று (29ம்தேதி) அதிகாலை விஸ்வரூப தரிசனம், திருவாராதனம், ராஜகோபுரம், விமானங்கள் திருமஞ்சனம், முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று (30ம்தேதி) அதிகாலை 4 மணிக்கு திருவாராதனம், காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி நிறைவு பெற்று திருப்பாவை சாற்றுமுறையுடன் திருப்பணிக்கான பாலாலய பிரதிஷ்டை பந்தக்காலுக்கு மஞ்சள், சந்தனம், பாலாபிஷேகம் செய்து, தீபாராதனையுடன் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்துமக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் பாலா, அறநிலையத்துறை உதவி ஆணையர் அஸ்வினி, கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.