மேட்டுப்பாளையம்: ‘மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில், மழை நீர் அதிகம் தேங்காமல் இருக்க, சாலையின் இரு புறமும் பள்ளம் தோண்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு, தினமும் திரளான பக்தர்கள் சென்று வருகின்றனர். உப்புப்பள்ளம் அடுத்த சாமியார் தோட்டம் அருகே, மழை காலத்தில், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, மழைநீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிந்த பின்தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்டுகிறது.
கடந்த வாரம் பெய்த கனமழையால், இந்த இடத்தில் மழை நீர் அதிகளவில் தேங்கி நின்றது. பொது மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, மழைநீர் செல்லும் வழியில், தனிநபர் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்ததால், தண்ணீர் செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என, பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறினர்.
இதுகுறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார் கூறுகையில், ‘‘வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் இருந்து வரும் மழை வெள்ளம், எனது தோட்டத்தின் வழியாக செல்லும்போது, பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு, தோட்டம் சேதமடைந்துள்ளது. அதனால் பட்டா நிலத்தில் மழை நீர் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை வெள்ளம், இந்த இடத்தில் தேங்கி நின்று, தோட்டத்தின் வழியாக தற்போதும் செல்கிறது. சாலையின் இரு பக்கம் மழை நீர் செல்வதற்கான பள்ளம் இருந்தது. காலப்போக்கில் மண் மூடியதால், மழை வெள்ளம் விவசாய நிலத்தின் வழியாக செல்கிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம், சாலையின் இருபக்கம் மண் எடுத்து பள்ளம் அமைத்தால் மழை நீர் தேங்காமல் சென்று விடும்,’’ என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையை ஆய்வு செய்து, சாலையின் இரு பக்கம், பள்ளம் அமைப்பதற்கான இடவசதி இருந்தால், பள்ளம் அமைத்து மழை நீர் செல்வதற்கான வழி அமைக்கப்படும்’ என்றனர்.