எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம், திருவல்லா, ஆலப்புழா, புனலூர், சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். இந்த பம்பா நதியில் நீராடிய பின் சபரிமலை ஏறுகின்றனர். இங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் சபரிமலை உள்ளது.
இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற பின்னர் ஸ்ரீராமனும், இலட்சுமணனும் காடுகளில் சீதையைத் தேடி அலைந்து துக்கப்பட்டனர். அப்போது மதங்க முனிவரின் ஆசிரமம் கண்களில் தென்பட அங்கே சென்றனர். அப்போது முனிவர் தீர்த்த யாத்திரை சென்றிருந்தார். ஆசிரமத்தில் உள்ள குடிலில் நீலி என்ற பெண் மட்டும் இருந்தாள். அவள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ராம, லட்சுமணர்களை வரவேற்றாள். முனிவருக்கு பணிவிடை செய்து வரும் அவள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற குற்ற உணர்வுடன் அவர்களுக்கு உணவளிக்கத் தயங்குவதை புரிந்து கொண்ட ராமபிரான், மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இதில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடு ஒன்றுமில்லை. நீ கவலைப்படாமல் எங்களுக்கு உணவளிப்பாயாக! என்று அன்புடன் கூறி உண்கிறார். மேலும் உன்னைத் தாழ்ந்த குலத்தவள் என்று கருதும் மக்கள் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை நான் உனக்கு அளிக்கிறேன்! என்று திருவாய்மலர்ந்தருளி, அவளது பூரண சம்மதத்துடன் அப்பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதமாக்கினார்.
அப்பெண் நீலிதான் இன்று பம்பா நதி எனப் போற்றப்படுகிறது. கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா. தட்சிண கங்கையான இங்கு ராம, இலட்சுமணர்களும் மனம் குளிர நதியில் நீராடி தனது தந்தை தசரதனுக்கு "பிதுர் தர்ப்பணம் செய்ததாக கூறுவர். இதனடிப்படையில் ஒரு சில பக்தர்கள் இந்த நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர். தர்ம சாஸ்தா இம்மண்ணுலகில் மணிகண்டனாக அவதரித்த இடம் இதுதான். இந்த இடத்துக்கு பம்பா சக்தி என்று இன்னொரு பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடி, வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. முக்கியமாக இங்குள்ள ஆஞ்சநேயர், சபரிமலை ஐயப்பனை நோக்கியே எழுந்தருளி இருக்கிறார். ராம அவதாரத்தில், பிற்காலத்தில் தாம் இங்கு வரப்போவதாகும், அப்போது தன்னைக் காண வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆஞ்சநேயருக்கு ராமர் அறிவுறுத்தியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள கணபதி மற்றும் ராமர் கோயில்களில் வழிபட்டு, நீலிமலை ஏறலாம். பம்பை நதிக்கரையில் மகர விளக்கு பூஜைக்கு முன்னர் விளக்கு உற்சவம் நடைபெறுகிறது. இதற்கு பம்பா உற்சவம் என்று பெயர். பெரிய இலைகளைக் கொண்டு தோணி போல செய்து அதில் நெய் தீபமேற்றி நதியில் மிதக்க விடுவார்கள். மேலும் இந்த பம்பை நதிக்கரையில் விதவிதமான உணவு சமைத்து மானசீகமாக ஐயப்பனுக்கு படைத்து பிரசாதமாக உண்பார்கள். இந்த உற்சவகால விருந்தில் சுவாமி ஐயப்பனும் பங்கேற்பதாக ஐதீகம். மேலும், புராண காலங்களில் ரிஷிகள் பலரும் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆதலால் இவ்விடம் யோகிகள் வாழ்ந்த யோக பூமியாகும். இந்த பம்பை நதி புனிதம் பெற தெய்வ நதிகளான கல்லாறு, கக்கட்டாறு ஆகிய நதிகள் சங்கமமாகின்றனர். எனவே, திரிவேணி சங்கமத்துக்கு இணையாக பம்பை நதி வணங்கப்படுகிறது.
சாஸ்தாவின் பூங்காவனம்: எரிமேலியில் தொடங்கி பம்பை., சன்னிதானம் வரையிலான 48 மைல்கள் (சுமார் 75 கி.மீ.) நடப்பது பெரிய பாதை. அடர்ந்த காடு. மலைகளைக் கடந்து செல்லும் இந்தப் பாதையில் யாத்திரை மேற்கொள்வது எளிதானதல்ல. எரிமேலியில் இருந்து நடக்கத் தொடங்கினால் பேரூர்தோடு வரை தார்ச்சாலை. அங்கிருந்துதான் ஐயனின் பூங்காவனம் தொடங்குகிறது. சிவன் கோயில் வரையான பாதை சிரமமின்றி இருக்கும். அதன்பிறகு ஒத்தையடிப் பாதையாகச் செல்லும் காட்டு வழிதான்.
காளைகட்டி., அழுதா நதி., அழுதா மலை., கல்லிடும் குன்று., இஞ்சிப்பாறை கோட்டை., முக்குழி தாவளம்., கரிவலந்தோடு., கரிமலை ஏற்றம்., கரிமலை இறக்கம்., பெரியானை வட்டம்., சிறியானை வட்டம் இவற்றைக் கடந்து சென்றால் பம்பையை அடையலாம். ஐயனின் பூங்காவனத்தில் நுழைந்துவிட்டால் கிழக்கு எது ., மேற்கு எது என்பதுகூடத் தொியாது. காட்டுப்பாதை முழுவதும் ஏற்றம்., இறக்கமாகத்தான் இருக்கும் பாறைகள்., பாதங்களைப் பதம் பார்க்கும் சிறிய கற்கள்., குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மரங்களின் வேர்கள்., முட்களைப் போலக் குத்தும் மரக் குச்சிகள் எனக் கரடுமுரடான பாதை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். பக்தர்கள் சொல்லும் வழிநடை சரணங்கள் காடு முழுவதும் எதிரொலிக்கும். ஒத்தையடிப் பாதையையொட்டி கிடுகிடு மலைச் சரிவுகள். கரணம் தப்பினால் அதல பாதாளத்தில் இழுத்துச் சென்றுவிடும். இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் ஐயனே நம்மை வழிநடத்திச் செல்வதால் காட்டுப்பாதையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதில்லை.