சபரிபீடம் - சரங்குத்தி - பஸ்மக்குளம்சபரிபீடம்: நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் "சபரிமலை என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்.. ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம். அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தை யின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.

யானைப்பாதை : சபரிபீடத்தை அடுத்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை வழியாகத்தான் செல்கின்றனர்.

சரங்குத்தி: இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும் மரத்திலான சரக்கோல்களை போட்டு வழிபடுகின்றனர். எந்த வருஷம் கன்னிச்சாமி யாருமே இங்கு வரவில்லையோ அப்போது உன்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு மாளிகை புரத்தம்மனுக்கு ஐயப்பன் வாக்குத் தந்திருக்காராம். அந்த அம்மன் இங்கே வந்துதான் சரங்களைப் பார்வையிடுவதாக கூறப்படுகிறது. இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் அடையலாம். ஐயப்பன் அம்பு எய்த மரம்:சபரிமலையில் நுழைந்ததும், 18-ம் படி ஏறுமுன் தரிசிக்க வேண்டிய ஒன்று ஐயப்பன் அம்பு எய்த மரம். நெய்த் தேங்காயைச் சமர்ப்பிக்கும் குண்டத்தின் அருகில் உள்ளது இந்த மரம். இந்த மரம்தான் ஐயப்பன் அம்பு எய்த மரம். தமக்குக் கோயில் எழுப்ப ஐயன் அம்பு எய்தபோது, இந்த இடத்தில்தான், இந்த மரத்தில்தான் அந்த அம்பு விழுந்தது. அதன்பிறகுதான், பரசுராமர் அங்கு ஐயப்பனைப் பிரதிஷ்டை செய்து 18 படிகளை உருவாக்கினார்.

பஸ்மக்குளம்: சபரிமலையில் பக்தர்கள் நீராடும் புண்ணிய தீர்த்தமான இக்குளம் ஐயப்பன் சன்னதியின் பின்புறம் உள்ளது. ஐயப்பன்மார்கள் இந்த தீர்த்தத்தில் குளித்து அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டனர். தற்போது இந்த குளம் அசுத்தமாகிவிட்டால் பெரும்பாலும் குளிப்பதில்லை. இந்த குளத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அவற்றில் பக்தர்கள் நீராடுகிறார்கள்.

சபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்