ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம். மாறாக, ஐயப்பன்தான் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார். படியேறிய பக்தர்கள் கொடிமரம் தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த சந்தோஷம் ஏற்படும். மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு "சின்முத்திரை காட்டுகிறார். "சித் என்றால் "அறிவு. இந்த வார்த்தையே "சின் என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை. ""மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம் (பொறாமை), மாயை(உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்...மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்,என்கிறார். யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை "யோக பட்டம் என்பர்.