மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா; பக்தர்கள் குவிந்தனர்



கூடலுார்; தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா கேரள வனத்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் நடந்தது. தூசி பறந்த பாதையில் நடந்து சென்ற பத்தர்கள் அவதிப்பட்டனர்.

தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., தூரத்தில் ஜீப் பாதையும், தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ.,தூர நடைபாதையும் உள்ளது. கண்ணகி பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக பூசாரி ராஜலிங்கம் பூஜை செய்தார். துர்க்கை அம்மன், சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கண்ணகியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு குங்குமம், துளசி, விபூதி, பழங்கள் மற்றும் பெண்களுக்கு வளையல், அட்சயப் பாத்திரம் மூலம் அவல் பிரசாதம் வழங்கப்பட்டது.

கூடுதல் பக்தர்கள்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். குமுளியில் இருந்து கோயில் வரை பக்தர்களை அழைத்துச் செல்ல 500க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயக்கப்பட்டன. கேரள வனப்பாதையில் ஜீப்பிலும், நடந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். கோயில் வளாகம், குமுளி, பளியன்குடியில் சித்தா மற்றும் பொது மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. பூஞ்சையாறு அரச வம்சத்தை சேர்ந்த திலீபன்வர்மா, உஷா வர்மா, ரகு வர்மா கலந்து கொண்டனர்.

தூசியால் பக்தர்கள் அவதி: மழையின்றி கேரள வனப்பகுதியில் ஜீப் செல்லும் பாதையில் தூசி அதிகமாக பறந்தது. நடந்து சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த ஆண்டை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஜீப்புகள் ஊர்ந்து சென்றன. குமுளியிலிருந்து 14 கி.மீ., தூரமுள்ள கோயிலை அடைய 3 மணி நேரம் ஆனது.

முழுக் கட்டுப்பாடு: கோயில் தமிழக கேரள எல்லையில் அமைந்திருந்தாலும் சித்ரா பவுர்ணமி விழா கேரள வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் நடந்தது. கோயில் தவிர மற்ற இடங்களில் தமிழக போலீசார் குறைவாக இருந்தனர். தமிழக அதிகாரிகளும் டென்ட் அமைத்து ஓய்வு நிலையிலேயே இருந்தனர். கோயில் மற்றும் பக்தர்கள் நடந்து வரும் பாதையில் கேரள வனத்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் இருந்தனர். அதிகாலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் சென்ற வாகனத்தில் பூஜை பொருட்கள் கொண்டு சென்றதை கேரள வனத்துறையினர் தடுத்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டு மறியல் செய்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். தமிழக அதிகாரிகள் இதை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், கண்ணகி அறக்கட்டளை மூலம் 6 டிராக்டரில் கொண்டு வந்த உணவு வழங்கப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்