பதிவு செய்த நாள்
21
மார்
2020
12:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் நேற்று முதல் மூடப்பட்டதால், வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து, சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வர்.
தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வரும், 31 வரை கோவில் மூடப்படும் என, நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்தது. இந்த தகவல் தெரியாமல், நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்து, வெளியேயிருந்து கோபுரம் மற்றும் மலைகளை மட்டும் தரிசனம் செய்து சென்றனர். மேலும், காணிக்கைகளை வெளியே உள்ள உண்டியல்களில் செலுத்திவிட்டு சென்றனர். கோவில் மூடப்பட்டதால், மாட வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், சுவாமி மற்றும் அம்மனுக்கு வழக்கமாக நடத்தப்படும், ஆறு கால பூஜைகளை கோவில் சிவாச்சாரியார்கள் செய்தனர். கோவில் ஊழியர்கள் வழக்கம்போல், பணிக்கு வந்தனர். நான்கு கோபுர வாசல்களிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.