108 திவ்ய தேசங்களில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பெருமாளை ‘பெரிய பெருமாள்’ என அழைப்பர். இக்கோயில் ஏழு பிரகாரங்களுடன் 156 ஏக்கர் பரப்பு கொண்டது. கோயிலைச் சுற்றி ஊர் இருக்கும். ஆனால் இங்கு கோயிலுக்குள் ஊர் இருக்கிறது. உள் வீதிகளில் வாகனங்கள் கூட செல்கின்றன. இங்குள்ள ரங்கநாயகி தாயாரே எல்லா தேவியரிலும் உயர்ந்தவள். பிரசாத பாத்திரம், வாத்தியம், பலகாரம் என எல்லாமே இங்கு பெரியது. உற்ஸவரை மக்களில் பெரியவனான ராஜாவுக்கு ஒப்பிட்டு ‘ரங்க ராஜர்’ என்றும், நமக்கே உரித்தானவர் என்னும் பொருளில் ‘நம்பெருமாள்’ என்றும், பேரழகு மிக்கவர் என்பதால் ‘அழகிய மணவாளர்’ என்றும் குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் அனைவராலும் விரும்பப்படுபவர் சுக்கிரன். பணக்காரர்களை, “உனக்கென்னப்பா சுக்கிர திசை’ என புகழ்ந்து சொல்வதுண்டு. சுக்கிரனுக்குரிய நாளான வெள்ளிக்கிழமையில் இத்தலத்தை தரிசித்தால் வளமான வாழ்வு அமையும்.