பதிவு செய்த நாள்
11
நவ
2020
04:11
தீபாவளியை ஒட்டி, 12 நாட்கள் மட்டும் திறக்கும், கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில், ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த நாட்களைத் தவிர ஆண்டு முழுவதும், இந்தக் கோவில் மூடியே இருக்கும். அந்தகாசுரன் என்பவன், அரிய சக்தியுள்ளவன். இவனை யார் வெட்டினாலும், அவனது உடலிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும், ஒரு அசுரனாக வடிவெடுக்கும்; உயிரும் போகாது.
இத்தகைய சக்தி வாய்ந்த வரத்தை, அவன் பிரம்மாவிடம் வாங்கியிருந்தான். ஒரு பெண்ணால் மட்டுமே இவன் கொல்லப்படுவான் என்பது விதி. பெண்களால் தன்னை ஏதும் செய்ய முடியாது என்ற மமதையில், இவன் தேவர்களைத் துன்புறுத்தினான். இதுகுறித்து, சிவனுக்கு புகார் சென்றது. அவர், யோகேஸ்வரி என்னும் சக்தியை உருவாக்கினார். அவளுக்கு உறுதுணையாக, பிராஹ்மி, மகேஸ்வரி, கருமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி எனும் சப்தமாதர்களை படைத்தார். சப்தம் என்றால் ஏழு. இந்த ஏழு சக்திகளுடன் யோகேஸ்வரி, அந்தகாசுரனை எதிர்த்தாள். அவன் உடலில் இருந்து சிந்திய ரத்தத்தை உக்ரம் வாய்ந்த ஏழு சக்திகளும் உறிஞ்சினர். வலுவிழந்த அந்தகாசுரனை அழித்தாள், யோகேஸ்வரி.
வாரணாசியில் நடந்த இந்தப் போருக்குப் பின், ஏழு சக்திகளும் தென்னகம் செல்லும்படி சிவனால் பணிக்கப்பட்டனர். அவர்கள் ஒரு வனப்பகுதிக்கு வந்த போது, அங்குள்ள சூழ்நிலை அவர்களுக்குப் பிடித்து விட்டது.
ஏழு பேரில் வைஷ்ணவி, மகேஸ்வரி, கருமாரி ஆகியோர், தங்கள் உடலை சுருக்கி, ஒரு எறும்பு புற்றில் தங்கினர். சாமுண்டி, வாராஹி, இந்திராணி ஆகியோர் ஒரு குளத்து நீரில் மறைந்து வாழ்ந்தனர். பிராஹ்மி ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்று விட்டாள். எறும்பு புற்றில் மறைந்த தேவிகள் மூவரை ஒருங்கிணைத்து, பிற்காலத்தில் கருவறை அமைக்கப்பட்டது. வனப்பகுதி மறைந்து, ஹாசன் நகராக வடிவெடுத்த பிறகு, 81 அடிய உயர கோபுரத்துடன், பெரிய கோவில் கட்டப்பட்டது. தன் மருமகளை கொடுமை செய்த மாமியார், பெரிய பாறாங்கல்லால், அவளைக் கொல்ல முயன்ற போது, மூன்று சக்திகளும் அந்த கல்லை தடுத்து நிறுத்தியது. அது, கருவறையில் உள்ளது. அந்தக் கல், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருவதாகவும், அது என்று தேவிகளைத் தொடுகிறதோ, அன்று, கலியுகம் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தக் கோவில், தீபாவளி காலத்தில் மட்டுமே திறக்கும். நவம்பர், 5ல் திறந்த இக்கோவில், 17ம் தேதி மதியம் மூடப்படும். இக்காலத்தில், கோவில், விளக்குகளால் அலங்கரிக்கப்படும். கடந்த ஆண்டில் நான்கு லட்சம் பேர் தரிசித்தனர். பெங்களூருவிலிருந்து சிரவணபெலகோலா வழியாக (என்.எச்.,75) 180 கி.மீ., கடந்தால், ஹாசனை அடையலாம்!