பதிவு செய்த நாள்
18
நவ
2020
03:11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். கடற்கரை தலமான இங்கு மணக்கோலத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.
வேதங்கள் சிவபூஜை செய்ய எண்ணி பூலோகத்தில் சில காலம் மனித வடிவில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கலியுகம் தொடங்கியது. ‛‛இனி உலகில் நல்லதற்கு காலம் இருக்காது. வேதங்களை யாரும் மதிக்க மாட்டார்கள்’’ என்னும் முடிவுக்கு வந்தன. அதனால் தாங்கள் வழிபட்ட சிவன் கோயிலின் பிரதான வாசலை அடைத்து விட்டு வானுலகம் புறப்பட்டன. இத்தலமே வேதாரண்யம் என்னும் சிவத்தலமாக திகழ்கிறது. வேதங்கள் வழிபட்டதால் சுவாமிக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும், அம்மனுக்கு வேத நாயகி என்றும் பெயர் ஏற்பட்டது. சக்தி பீடங்களில் சுந்தரி பீடம் எனப்படுகிறது.
பிரதான வாசலை அடைத்ததால், பிற்காலத்தில் கோயிலுள்ள திட்டி வாசல் என்னும் பக்க வாசல் வழியாக பக்தர்கள் வழிபட வந்தனர். ஒருசமயம் இங்கு நாயன்மார்களான திருநாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் வந்த போது, தேவாரப் பாடல் பாடி பிரதான வாசல் கதவை திறக்கவும், அடைக்கவும் வழிசெய்தனர். இங்குள்ள வேதநாயகி அம்மனின் குரல் வீணையை விட இனிமையானது என்பதால் ‘யாழைப் பழித்த மொழியாள்’ எனப்படுகிறாள். இதனால் வீணையை ஏந்தாமல் தவக் கோலத்தில் சரஸ்வதி இங்கு இருக்கிறாள். மற்ற கோயில்களில் வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை, இங்கு மட்டும் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பு. முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் கொடுக்கப்பட்ட ஏழு தியாகராஜர் சிலைகளில் இரண்டாவது சிலை இங்குள்ளது .தீபாவளியன்று சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கும்.
மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி நதிகளில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். கோயிலுக்கு எதிரே உள்ள கடல் ஆதிசேது எனப்படுகிறது. இதில் ஒருமுறை நீராடினால் ராமேஸ்வரத்தில் நுாறு தடவை நீராடியதற்கு சமம். விநாயகர், சிவன், அம்மன் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உள்ளது. அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்த தலங்களில் இதுவும் ஒன்று. இதனால் சுவாமிக்கு ‘மறைக்காட்டுறையும் மணாளர்’ என பெயருண்டு. கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் பின்புறம், காளை வாகனத்தில் சிவபார்வதி மணக்கோலத்தில் காட்சி தருகின்றனர். இவர்களை தரிசித்தால் திருமண யோகம் உண்டாகும். 63 நாயன்மார்கள், பத்து தொகையடியார்களுக்கு சன்னதிகள் உள்ளன. சிவனுக்குரிய சபைகளில் இத்தலம் தேவ பக்தசபையாகும். புகழ் மிக்க ‘கோளறு பதிகம்’ என்னும் கிரக தோஷம் போக்கும் பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கு தான் பாடினார். மேலைக்குமரர் எனப்படும் இத்தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
எப்படி செல்வது :
* நாகபட்டினத்தில் இருந்து 45 கி.மீ.,
* திருவாரூரில் இருந்து 63 கி.மீ.,