வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2012 03:12
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசிஇலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு. சாப்பாட்டை முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்குள் சாப்பிடுவது மிகவும் உசிதம். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவர்.
ஏகாதசிக்குரிய தலம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஏகாதசி விரதத்திற்கு பெயர் பெற்றது. இத்தலம் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் இதுவும் ஒன்று.