பதிவு செய்த நாள்
18
டிச
2012
04:12
ராமாவதார காலத்தில், ரங்கநாதர் கோயில் அயோத்தியில் இருந்தது. ரங்கநாதரே அவரது குலதெய்வம். தனது பட்டாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, ராமபிரான் பரிசுகளை வழங்கினார். ராவணனின் தம்பி விபீஷணன், ரங்கநாதர் சிலை தனக்கு வேண்டுமென கேட்க, அதையே பரிசாகக் கொடுத்தார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளை வைத்து, ஆகாயமார்க்கமாக விபீஷணன் பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளும் தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார். அரங்கனைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாவே என்று மெய்சிலிரித்துப் போன மன்னன் அங்கே அழகிய ஆலயத்தை எழுப்பினான்.
வைகுண்டத்தின் பூர்வீக தெய்வம்: மனிதர்களை , பூர்வீகக் குடிகள், நவீன காலத்தவர் என்று இருவகையாகப் பிரிப்பது போல, வேதம் கடவுளைப் பூர்வகால பரமாத்மா, நவீனகால பரமாத்மா என்று பிரிக்கிறது. வைகுண்டத்தில் பாற்கடல் வாசனாக வீற்றிருக்கும் பரவாசுதேவனே பூர்வீகமானவன். அதாவது பழமை மிக்கவன். அவனிடமிருந்தே இந்த பிரபஞ்சம் உற்பத்தியானது. பூலோக உயிர்களைக் காப்பதற்காக அவன் இறங்கி வருவதுண்டு. அதையே அவதாரம் என்று குறிப்பிடுகிறோம். நரசிம்ஹ ராம கிருஷ்ணாத் அவதாரைஹி என்கிறது வேதம். பரம்பொருள், சாமான்ய மக்களிடம் கலந்து வாழ்வதற்காக பூமியில் அவதரிக்கிறார். இவற்றில் நரசிம்ம, ராம, கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர்களை வேதம் நவீனமான பரமாத்மா என்று போற்றுகிறது.
சொர்க்கவாசலா! நுழையவே வேண்டாம்: உலகத்தைப் படைத்த இறைவன், நமக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தார். கோடி நன்மையான விஷயங்களைக் கொடுத்தவர், ஒன்றிரண்டு தீமையான விஷயங்களையும் வைத்தார். இதன்மூலம் உலக உயிர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. எவனொருவன் நல்லதைப் பிடித்துக்கொண்டானோ, அவன் மீண்டும் இறைவனையே அடைகிறான். கெட்டதைப் பிடிப்பவனுக்கு பல சோதனைகளையும், ஆயிரமாயிரம் பிறவிகளையும் கொடுத்து படாதபாடு படுத்தி, ஞானத்தைக் கொடுத்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். யார் நல்லது செய்கிறார்களோ, அவர்கள் பக்கம் அவன் நிற்கிறார். திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, நல்லவர்களான பாண்டவர்களுடன் நின்றார். கெட்டவர்களான கவுரவர்களை அழிக்க துணைசெய்தார். எனவே, இறைவன் கொடுத்த நல்லதை மட்டுமே தேர்வு செய்பவர்கள், பாவக்கணக்கு பட்டியலில் இருக்கமாட்டார்கள். அவர்கள் பெருமாள் கோயிலுக்குப் போய் சொர்க்கவாசலுக்குள் நுழைய வேண்டுமென்பதில்லை. அவர்களின் பாவத்தைப் பெருமாளே துடைத்து, பரமபதத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவார்.